Wednesday, 12 October 2011

உயிருக்கு ஆபத்தான கூடங்குளம் அணு உலைகள், தமிழன் வரலாற்றையும் அழிப்பவை


கூடங்குளம் கிராம எல்லைக்குட்பட்ட பகுதியில் 1980களில் இரண்டு அணுமின் உலைகள் அமைப்பதற்கு என்று கூறி நிலம் கையகப்படுத்தினார்கள். இப்போது ஆறு அணுமின் உலைகள் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அப்படியானால், தேவைப்பட்டது போல் மூன்று மடங்கு நிலத்தை முதலிலேயே அன்றைய அடிமாட்டு விலையில் கையகப்படுத்தியுள்ளார்கள். இது ஒருவித ஏமாற்றுவேலை ஆகாதா? நில அபகரிப்பு என்று இப்போது பல இடங்களிலும் பேசப்படுகிறதே, கூடங்குளத்தில் மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டு நில அபகரிப்பு செய்ததா?

கூட‌ங்குள‌ம் க‌ட‌ற்க‌ரையில் எம‌னின் குடியிருப்பு?

ஆறு மின் உலைகளுக்குத்தேவையான நிலத்தை, இரண்டு மின் உலைகளுக்கு என்று கூறி எதிர்காலத் திட்டத்தை வெளியிடாமலே இரகசியமாக வைத்துக்கொண்டு அரசும் அதிகாரிகளும் நிலம் கையகப்படுத்தி உள்ளார்கள் என்று தோன்றுகிறது. பின்னால் புதிதாக நான்கு மின் உலைகளை பணித்திட்டத்தில் சேர்க்கும் சமயத்தில் நிலத்திற்கு அப்போதைய நிலவரப்படி அதிக இழப்பீடு கொடுக்க வேண்டியது வரும் - ஒருவேளை அதிக எதிர்ப்பையும்கூட எதிர்கொள்ள‌ வேண்டி வரும் - என்று எண்ணியதால் முன்கூட்டியே அரசு இவ்வாறு செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இது ஏமாற்று ஆகாதா? (நிலம் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானது; தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் யார் நிலத்தை வேண்டுமானாலும் அரசு கையகப்படுத்தலாம் என்ற 'சட்டம்' இருந்தாலும்கூட.)

மக்களின் வாழ்வாதாரங்களில் அசைக்க முடியாத முக்கியத்துவம் கொண்டது அவர்கள் வாழும் நிலம். அடிப்படை உரிமைகளில் அதிக முக்கியமானது இருப்பிடம் குறித்த உரிமையாகும். இருப்பிடம் இருந்தால்தான் உணவு, உடை போன்றவற்றை ஈட்டிக்கொள்ள இயலும். அந்த நிலத்தை அங்கு வாழும் மக்களிடம் இருந்து அவர்களின் முழுச்சம்மதம் இல்லாமல் பறிப்பது கொடிய பாவமாகும்.

தொடரும் மக்கள் போராட்டம்

அணுமின் உலைகளை முதலில் உருவாக்கிய மேலை நாடுகள் இப்போது அதன் தீமைகளை உணர்ந்து, புதிதாக அணுமின் உலைகளை அமைப்பதை நிறுத்திக்கொண்டுள்ளன. மேல்நாடுகளைப்பின்பற்றி அணுமின் உலைகளை தாமும் அமைத்துக்கொண்ட நாடுகள் அவ‌ற்றைப் பராமரிப்பதில் பல சிக்கல்களை அனுபவித்துள்ளன.

இதுவரையில் எந்த அணுமின் உலையாவது நம் நாட்டில் அதன் முழு உற்பத்தித் திறன் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதா என்றால் ஒரு மின் உலையும் அப்படி செய்ததே இல்லை என்பதுதான் பதில். சென்னைக்கு அருகிலுள்ள‌ கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் சரித்திரம் ஒரு நல்ல உதாரணம்.

முன்னேறிய நாடுகளிலுள்ள அணுமின் உலைகளில் நிகழ்ந்த விபத்துக்களும், அவற்றால் உண்டான சேதங்களும் பரம இரகசியங்களாகக் காப்பாற்றப்பட்டு வருகின்றனவே, ஏன்?

நம்முடைய கல்பாக்கம் அணுமின் உலைகளும், அணு ஆய்வு மையமும் 2004 சுனாமியில் அடைந்த சேதம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது. இற‌ந்த பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சாதாரண ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியிட‌ப்ப‌ட‌வில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

கூடங்குளத்தில் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌ட‌வுள்ள‌ மின்சார‌த்தில் ஒரு ப‌குதிதான் த‌மிழ் நாட்டுக்குத் த‌ர‌ப்ப‌டும். மீத‌ம் பிற‌ மாநில‌ங்க‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டும். அணுமின் நிலைய‌ம் இங்கு அமைவ‌தால் எந்த‌ பாதிப்பும் அந்த‌ மாநில‌ங்க‌ளுக்கு இல்லை. பாதிப்புக‌ள் எல்லாம் த‌மிழ் நாட்டின் தென் மாவ‌ட்ட‌ங்க‌ளுக்குதான்.

‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளில் முக்கிய‌ இட‌ம்பெற்றுள்ள ‘முத்து’, முற்கால‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு மிக‌ அதிக‌ அள‌வில் கிடைத்த‌து நெல்லை, தூத்துக்குடி மாவ‌ட்ட‌ங்க‌ளின் க‌ட‌ற்க‌ரைப் ப‌குதிக‌ளில்தான். அதிகமாக முத்து விளையும் க‌ட‌ல் ப‌குதி இதுதான்.

க‌ல்லூரி மாண‌விக‌ளும் பெண்க‌ளும்

இங்கு பிடிக்கப்படும் மீன் மும்பயி வரையிலும்கூட அனுப்பப்படுகின்றது. இறால் போன்ற‌ அரிய மீன்கள் பதப்படுத்தப்பட்டு ஜப்பான் போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுவதின் மூலம் அந்நியச் செலாவணியும் கிடைக்கின்றது.

விவ‌சாய‌ம் பெரிய‌ அள‌வில் ந‌டைபெறும் ப‌குதிக‌ள் நிறைய‌ உண்டு. தாமிர‌ப‌ர‌ணி உட்ப‌ட‌ ப‌ல‌ ஆற்றுப் பாச‌ன‌ நில‌ங்க‌ள் உண‌வு உற்ப‌த்தியில் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌.

மேற்கில் திருவனந்தபுரத்திலிருந்து கிழக்கில் இராமேஸ்வரம் வரையிலும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சுமார் 300 கிலோமீட்டர் நீள கடற்கரைப் பகுதி, கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பல சிறிய, பெரிய ஊர்களைத் தன்னுள் கொண்டது. தென் தமிழகத்திலும் தென் கேரளத்திலும் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிரட்டுதூரத்திற்குள் அமைந்துள்ளன என்பதை அலட்சியம் செய்துவிட முடியாது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகும‌ரி ஆகிய‌ ‌ இம்மூன்று மாவ‌ட்ட‌ங்க‌ள் த‌மிழ்ம‌க்க‌ள் வ‌ர‌ல‌ற்றில் மிக‌ முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் நில‌ப்ப‌குதிக‌ளைத் த‌ம‌க்குள் அட‌க்கிய‌வை என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து. த‌மிழ் அர‌ச‌ர்க‌ளில் மூத்த‌வ‌ர்க‌ளான‌ பாண்டிய‌ர்க‌ளின் முத‌ல் த‌லைந‌க‌ரான‌ கொற்கை தூத்துக்குடி அருகில்தான் அமைந்துள்ள‌து.

இங்குள்ள ப‌ல‌ பேரூர்கள், கிராமங்கள் ப‌ழ‌ந்த‌மிழ் நாட்டு ஊர்க‌ளாகும். இரண்டாயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கும் முன்பிருந்தே உள்ள‌ ஊர்க‌ள் ப‌ல இங்கு உண்டு.

இந்த‌ மூன்று மாவ‌ட்ட‌ங்களில் அமைந்துள்ள ஊர்களும், க‌ட‌ற்க‌ரைக‌ளும், க‌ட‌ற்க‌ரையை ஒட்டி சில‌ கிலோ மீட்ட‌ர்க‌ளுக்கு விரிந்திருக்கும் ஆழமில்லாத க‌ட‌ல் ப‌குதிக‌ளும் மிகப்பழமையான மனிதக் குடியிருப்புகளை உள்ளடக்கியவை ஆகும். திருநெல்வேலி அருகிலுள்ள சுமார் 3,000 வருடங்களுக்கும் முற்பட்ட, புதையுண்ட குடியிருப்புப் பகுதியான ஆதிச்சந‌ல்லூர் இன்னும் முழுமையாக‌ ஆய்வு செய்ய‌ப்ப‌ட்டு விடவில்லை. இது தமிழ் நாட்டின் மொஹஞ்சொதாரோ அல்லது ஹரப்பா என்று கூறலாம்.

சுமார் 100 ஆண்டுகளாக மின்சாரம் பொதுஜன உபயோகப் பொருளாக உலகில் மனிதனால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மின்சார உற்பத்திக்கு அணுசக்தியை பயன்படுத்துவது என்பது கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு உட்பட்ட கால கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஒரு வழிமுறை.

ஒருமுறை அணு உலை அமைக்கப்பட்டுவிட்டால், அதை செயலிழக்கச் செய்ய மனிதனால் முடியாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்கதிரியக்கம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அணு உலை அமைந்த இடத்தை, பிறகு வேறு பயன்பாட்டுக்கு யுகாயுகத்திற்கும் திரும்பப் பெறமுடியாது; காலாகாலத்திற்கும் அது மனிதன் நெருங்கமுடியாத, உயிர்கள் இருப்பதற்கே தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.

அணுமின் உலையைப் பொறுத்த வரையில், விபத்து நிகழ்ந்தால்தான் ஆபத்து என்றில்லை. ஒரு இடத்தில் அணு உலை இருப்பதே ஒரு விபத்துதான். அதிலிருந்து தொடர்ந்து கசியும் கதிர்வீச்சு அணுமின் உலையின் சுற்றுப்புறப் பகுதிகளை மெல்ல மெல்ல உயிர்களின் வாழ்வுக்கு தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டே இருக்கும். நாட்கள் செல்லச்செல்ல இவ்வாறு தொடர் பாதிப்புக்கு உள்ளான பகுதியின் பரப்பும் விரிந்துகொண்டே போகும்.

அங்கு வாழும் உயிர்கள் பல கொடிய நோய்களுக்கு உள்ளாவதுடன், விளையும் பயிர்களும் காய்கறிகளும்கூட தம்மில் கதிர்வீச்சு உள்ளவையாக இருக்கும். இது பல கொடிய நோய்களுக்குக் காரணமாக அமையும். மொத்தத்தில், அணு உலையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் சுற்றளவிற்கு நிரந்தர பாதிப்புப் பகுதிதான். இதை ஒருபோதும் மாற்ற முடியாது.

பூமியின் எந்த ஒரு பகுதியையும் அப்படி உயிர்கள் எதுவும் வாழத் தகுதி அற்றதாக நிரந்தரமாக மாற்றிப்போடும் தார்மீக உரிமையோ அல்லது அதிகாரமோ மனிதனுக்கு இருக்கிறதா என்பதும் எண்ணிப்பார்க்க வேண்டிய விஷயம்.

தொழில்நுட்ப‌ம் என்று பார்த்தாலும், இது காய‌லாங்க‌டை லெவ‌லில் உள்ள‌ ர‌ஷ்யாவின் தொழில்நுட்ப‌ம். முத‌லில் ஒப்ப‌ந்த‌ம் போட‌ப்ப‌டும்போது இருந்த‌ சோவிய‌த் யூனிய‌ன் அத‌ன்பின் சில‌ ஆண்டுக‌ளிலேயே சிதைந்துபோன‌து. அந்த‌ உடைந்த‌ க‌ப்ப‌லின் ஒரு பெருந்துண்டான‌ இன்றைய‌ ர‌ஷ்யா நாடு, அந்த‌ ப‌ழைய‌ தொழில்நுட்ப‌த்துக்குக் கியார‌ண்டி வ‌ழ‌ங்க‌ த‌குதி இல்லாத‌து. ப‌ழ‌ம்பொருளை விற்றுப் ப‌ண‌ம் பார்க்கும் அவ‌சியம், பொருளாதாரத்தில் வீழ்ந்துபோன‌ அந்நாட்டிற்கு இருக்க‌லாம். அந்த‌ப் பொருளை நாம் வாங்க‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌ என்பதைக் குறித்து நாம்தான் சிந்திக்க‌ வேண்டும்.

லிவான முறையில் மின்சாரம் தயாரிக்க அணுசக்திதான் ஏற்றது என்று கூறுகிறார்கள். இதுவரையில் துவங்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தியால் மின்சாரத்தின் விலை, அதாவது மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணம், குறைந்தது என்று ஒருமுறையாவது நாம் கேள்விப் பட்டது உண்டா? இல்லையே.

மின்சாரம் தயாரிக்க, சுற்றுச்சூழலைப் பாதிக்காத தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உலக நாடுகள் தீவிரமாக முனைந்துள்ளன. கூடங்குளம் பகுதியைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் நாட்டின் வேறு பகுதிகளிலும் காற்றைப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத இந்த முறை நல்ல வரவேற்பு பெற்றுள்ள ஒன்று.

கூடங்குளம் பகுதியில் மக்களால் நடத்தப்படும் இந்த‌ போராட்ட‌ம் எந்த‌ வ‌கையிலும் அர‌சிய‌ல் தூண்டுத‌லினாலோ அல்ல‌து குறுகிய‌ சாதி உண‌ர்வுக‌ளாலோ ஏற்ப‌ட்ட‌து அல்ல‌. சாதி, ம‌த‌ வித்தியாச‌ங்களைக் க‌ட‌ந்து ம‌க்க‌ள் அனைவ‌ரும் ஒன்றுப‌ட்டு ந‌ட‌த்தும் ஒரு போராட்ட‌ம் இது என்ப‌து க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒன்று.

குடும்ப‌த்திற்கு உண‌வு ப‌டைப்ப‌வ‌ர்கள் உண்ணாவிர‌த‌ப் ப‌ந்த‌லில்

போராட்டம், அணுமின் நிலையத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலத்தைத் திரும்பப் பெறவோ அல்லது கூடுதலாக இழப்பீட்டுத்தொகை கோரியோ அல்ல என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறுகிய லாபம் தேடும் எண்ணம் இதில் இல்லை.

அந்த இடத்தில் வேறு தொழில்களைத் துவங்கி வேலை வாய்ப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் நல்ல ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று இவர்கள் கூறுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அணுமின் உலைக்கு எதிரான போராட்டம் ஏதோ முன்னேற்றம் என்றால் என்ன என்று அறியாத பாமர மக்களின் பிற்போக்கு எண்ணத்தின் விளைவு என்று யாராவது நினைப்பார்களானால், அவர்கள் பிரச்சினையின் அடிப்படையையே புரிந்துகொள்ளவில்லை என்றுதான் பொருள்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌ங்க‌ள் இந்தியாவில் அதிக‌ ம‌க்க‌ள் நெருக்க‌முள்ள‌ மாவ‌ட்ட‌ங்க‌ளின் வ‌ரிசையில் உள்ள‌வை. ப‌டித்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையிலும் இவை முன்ன‌ணியில் உள்ள‌ மாவ‌ட்ட‌ங்க‌ள்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இளைஞர்கள்

இப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய‌த்திற்கு எதிராக‌ கூட‌ங்குள‌த்திலும் அத‌ன் சுற்று வ‌ட்டார‌த்திலும் வாழும் ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ குர‌ல் வ‌லுவாக எழும்பியுள்ள‌து. மனித உரிமை இயக்கங்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் இந்தக் குரலை பலமாக எதிரொலிக்கத் துவங்கியுள்ளனர்.

ல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துவிட்ட நிலையில் திட்டத்தைக் கைவிடுவது ஆகாத காரியம் என்று சிலர் எண்ணுகிறார்கள். சுமார் 20,000 கோடி ரூபாய் பணம்‌ முக்கியமா அல்லது இரண்டு மாநில மக்களின் உயிர்கள் நிரந்தரமான ஆபத்தில் இருந்து காக்கப்பட வேண்டியது முக்கியமா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

அமெரிக்காவுடனான சிவில் அணுசக்தி உபயோக ஒப்பந்தம் கையெழுத்திடப்படக் கூடாது என்று கூறி அதை கம்யூனிஸ்ட் கட்சிகளும், அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வும், பாரதீய ஜனதா கட்சியும் எதிர்த்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய‌ அரசைத் தோற்கடித்து, மன்மோக‌ன் சிங் தலைமையிலான மத்திய அரசைக் கவிழ்த்து இடைத்தேர்தலைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று 2008 ஜூலையில் அந்தக் கட்சிகள் முனைப்பாக நின்றன. அதாவது, ஒரு இடைத் தேர்தலுக்குக் காரணமாய் அமைவதின்மூலம் இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்  செலவு ஏற்படுத்த‌ அந்தக் கட்சிகள் தயாராய் இருந்தன.

அணுமின் நிலையத் திட்ட வேலையைக் கைவிடுவதற்கு, இதுவரையிலும் திட்டத்திற்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பது ஒரு தடை ஆகாது.

பிரதமர் மன்மோகன் சிங் இந்த அணுமின் நிலையத் திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு ஆதரவானவர். தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா இந்தத் திட்டத்திற்கு எதிரான கொள்கை உள்ளவர் அல்ல. பொதுமக்களில் 127 பேர் உறுதியான உண்ணவிரதப் போராட்டத்தில் தங்களையே அர்ப்பணித்துவிட்ட நிலையில், தமிழகத்தின் பல கட்சிகள் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்கும் போராட்டத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்து விட்ட நிலையில், ஜெயலலிதாவும் சிறிது ஆதரவான ஒரு நிலையை எடுத்துள்ளார்.

இதையெல்லாம் சம்பந்தப்பட்ட‌ அனைவரும், முக்கியமாக‌ மத்திய மாநில அரசுகளும், கண்மூடித்தனமான‌ மின்சார விரும்பிகளின் கூட்டமும் கூட ‌கவனிக்க வேண்டும். ம‌க்க‌ள் குர‌லே ம‌கேச‌ன் தீர்ப்பு என்ற‌ வ‌கையில் பார்த்தால் இந்தத்‌ திட்ட‌ம் நிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டிய‌ ஒரு திட்ட‌ம் என்ப‌து தெளிவு.